குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்தபோது சொந்த ஊரில் போராட் டத்தை முன்னின்று நடத்தியதோடு, அந்த போராட்டத்திற்கு உண்டான வரவு-செலவுகளைக் கேட்டதற்காக அ.தி.மு.க.வை சேர்ந்த ஜமாத் நிர்வாகி கள், மூன்று குடும்பங்களை ஜமாத்தை விட்டே விலக்கிவைத்துள்ளனர்.
தேரழுந்தூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த இணைபிரியா சகோதரர்கள் முகமது ஹாரிஸ், முகமது ரியாஸ். மூன்று மாதத்திற்கு முன்பு முகமது ஹாரிஸின் மாமியார் மும்தாஜ்பேகம் வயோதிகத்தால் இறந்துவிட, அவரது இறப்பு குறித்த தகவலை ஜமாத்திற்கு முறைப்படி தெரிவித்தனர். ஆனால் பலமணி நேரமாகியும் ஜமாத் நிர்வாகத் தின் சார்பில் சம்பிரதாய சடங்கு களையோ, இறப்பின் அறிவிப்பையோ, தொழுகையையோ நிர்வாகிகள் செய்ய வில்லை. ஒன்றும் புரியாமல் பதறி யடித்துக்கொண்டு ஜமாத் நிர்வாகத் தினரை சந்தித்துக் கேட்டபோது, அவர்களிடம் இருந்துவந்த பதில்களும், அந்த நிமிடத்திலிருந்து அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளும் தற் கொலைக்கு கொண்டுசெல்லும் அளவிற்கு இருந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை குடும்பத்தினரோடு சந்தித்து புகாரளித்து விட்டு வந்த முகமது ஹாரிஸ், முகமது ரியாஸ் சகோதர்களிடமே விசாரித் தோம். "எங்க ஜமாத்தின் பூர்வகுடிகள் நாங்கள். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்தது. எங்க ஊரில் அந்த போராட்டத்தை முன்னெடுத்து நடத்தியவர்களுள் நாங்களும் உண்டு. அப்போது ஜமாத் நிர்வாகிகளான அ.தி.மு.க.வைச் சேர்ந்த நஜீர், சலீம், சுல்தான் ஆகியோர் "ஏம்பா தேவையில் லாம போராட்டம் நடத்தி அரசாங்க எதிர்ப்பை சம்பாதிக்கிறீங்க' என பட்டும்படாமல் பேசினர். போராட் டத்தின்போது பள்ளிவாசல் சார்பாக பொது நிதி வசூலிக்கப்பட்டது, அதற்கான கணக்கு வழக்குகளை ஜமாத்தார் கொடுக்கவில்லை. பள்ளிவாசல் பொதுப் பலகையில் ஒட்டவில்லை. இதுகுறித்து நாங்கள் வெளிப்படையாக கேட்டோம். அப்பவே அவங்க மனசுல பழிவாங்கும் எண்ணம் துவங்கிடுச்சி.
குடியுரிமை சட்டத்தை ஆதரித்த நஜீர் அகமது, அ.தி.மு.க. சார்பில் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டார். அப்போது "இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டத்தை ஆதரிக்கும் அ.தி.மு.க. வேட்பாளராக நீங்க போட்டியிடுறீங்க, அதனால ஜமாத்தின் நிர்வாகி பொறுப்பி லிருந்து விலகிடுங்க' என எனது தம்பி ரியாஸ் வெளிப்படையாக கூறியது, அவருக்கு எங்கள் மீது அதிக கோபம் உண்டாக காரணமாகிடுச்சி.
ஜமாத் நிர்வாகிகளுக்கு எங்கள் மீது வஞ்சம் இருந்தது, மாமியார் இறந்த பிறகுதான் தெரிந்தது. எங்களுக்கு எதிரா தேர்தல்ல வேலை பார்க்குற அளவுக்கு, வரவு-செலவு கணக்கு கேட்குற அளவுக்கு நீங்க பெரிய ஆளுங்களாடா? எங்க தயவு இல்லாம எப்படி அடக்கம் செய்யுறீங்கன்னு பார்க்குறோம்'' என ஏக கோபத்துல பேசினாங்க.
"இனிவரும் காலங்களில் ஜமாத் நிர்வாகத்தில் கணக்கு வழக்குகளை கேட்கமாட் டோம்'னு எழுதிக் கேட்டாங்க. அவங்க கேட்டபடி எழுதிக் கொடுத்து காலில் விழுந்த பிறகே ஜமாத்தில் இறப்பு செய்தியை அறிவித்து அடக்கம் செய்யவிட்டனர். "யார் வீட்டுல எது நடந் தாலும் முதல் ஆளா ஓடுனதுக்கு ஊர்ல எங்க ளுக்கு நல்ல பரிசு கிடைச் சிடுச்சி' என வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் வச்சோம். இதை யாரோ ஜமாத்தார் களிடம் சொல்லிட்டாங்க. கோபமானவங்க 16-3-2021 அன்று ஜமாத் கூட்டத்தைக் கூட்டி எங்களையும், எங்களோடு நெருங்கிப் பழகிய முகமது யூசுப் குடும்பத்தையும் சேர்த்து ஒதுக்கி வச்சி தீர்மானம் போட்டுட்டாங்க. ஜமாத் தீர்மானத்தை யாராவது மீறினால் அவங்களையும் ஒதுக்குவோம்னு ஆணவமா சொல்லிட்டாங்க.
வேறு வழியில்லாம மயிலாடுதுறை டி.எஸ்.பி. யிடம் புகார் அளித்தோம். அவர் குத்தாலம் காவல் நிலையத்தில் விசாரிக்கச் சொன்னார். அங்கும் அவர் கள் கட்டுப்படவில்லை, ஆத்திரமடைந்த குத்தாலம் இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி. யிடமே அனுப்பினார். டி.எஸ்.பி., மாவட்ட ஆட்சியர் பேசிய பின்பும் இன்றுவரை எப்படி, எப்படியெல் லாம் நெருக்கடி கொடுக்கணுமோ அப்படி கொடுக்கிறாங்க'' என்கி றார்கள் கலங்கியபடியே.
ஜமாத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ள மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த யூசுப்,’"ஜமாத் என்பது சமூக ஒற்றுமைக்காக இருக்கிறது, ஆனால் ஜமாத்தார் களான நஜீர், சலீம், சுல்தான் உள்ளிட்டவர்கள் சுயநல அரசியல் லாபத்திற்காக மார்க்கத்தைப் பயன்படுத்துறாங்க. பூம்புகார் முன்னாள் எம்.எல்.ஏ. பவுன்ராஜின் பெயரைச் சொல்லியே அடிக்கடி எங்களை மிரட்டுவாங்க, இப்ப ஆட்சிமாறியதும், தி.மு.க. பக்கம் தாவி, மா.செ. மூலம் மிரட்டுறாங்க. முதல்வர்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும்''’என்கிறார்.
ஜமாத் தலைவர்களான, எம்.ஏ. நஜீர்அகமது, கே.எம்.பி. முகமது சலீம் ஆகிய இருவரிடமும் கேட்டோம். "அவங்க சொல்லுறது பொய்ங்க. கொஞ்சம் அதிகப்படியா நடந்துக்கிற பசங்க, ஆனாலும் நாங்க அத பெருசா எடுத்துக்கிறதில்ல. நாங்க அவங்களை விலக்கி வைக்கல''’ என்கிறார்கள்.
தி.மு.க. எம்.எல்.ஏ. நிவேதாமுருகனிடம் இந்த விவகாரத்தை கொண்டு சென்றோம். "கட்சியில சேர்ந்தது உண்மை, ஆனால் பிரச்சனை எனக் குத் தெரியாது, யாரும் யாரையும் ஊரைவிட்டு ஒதுக்கிவைக்க உரிமை யில்லை. இதனை விசாரித்து சுமுகமாக தீர்க்குறேன்''’என்றார் பொறுப்புடன்.
இறுதியாக மாவட்ட எஸ்.பி. சுகுணா சிங்கிடம் கேட்டோம். “"எனக்கு இப்பதான் தகவல் வந்திருக்கு. நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்''”என்றார்.